Lafzullah

Tamil Mokhtasar — Gâşiye 88:1 – Nas 114:6

Author / source: Tamil Mokhtasar

Contents
  1. Gâşiye 88:1
  2. Gâşiye 88:2
  3. Gâşiye 88:3
  4. Gâşiye 88:4
  5. Gâşiye 88:5
  6. Gâşiye 88:6
  7. Gâşiye 88:7
  8. Gâşiye 88:8
  9. Gâşiye 88:9
  10. Gâşiye 88:10
  11. Gâşiye 88:11
  12. Gâşiye 88:12
  13. Gâşiye 88:13
  14. Gâşiye 88:14
  15. Gâşiye 88:15
  16. Gâşiye 88:16
  17. Gâşiye 88:17
  18. Gâşiye 88:18
  19. Gâşiye 88:19
  20. Gâşiye 88:20
  21. Gâşiye 88:21
  22. Gâşiye 88:22
  23. Gâşiye 88:23
  24. Gâşiye 88:24
  25. Gâşiye 88:25
  26. Gâşiye 88:26
  27. Fecr 89:1
  28. Fecr 89:2
  29. Fecr 89:3
  30. Fecr 89:4
  31. Fecr 89:5
  32. Fecr 89:6
  33. Fecr 89:7
  34. Fecr 89:8
  35. Fecr 89:9
  36. Fecr 89:10
  37. Fecr 89:11
  38. Fecr 89:12
  39. Fecr 89:13
  40. Fecr 89:14
  41. Fecr 89:15
  42. Fecr 89:16
  43. Fecr 89:17
  44. Fecr 89:18
  45. Fecr 89:19
  46. Fecr 89:20
  47. Fecr 89:21
  48. Fecr 89:22
  49. Fecr 89:23
  50. Fecr 89:24
  51. Fecr 89:25
  52. Fecr 89:26
  53. Fecr 89:27
  54. Fecr 89:28
  55. Fecr 89:29
  56. Fecr 89:30
  57. Beled 90:1
  58. Beled 90:2
  59. Beled 90:3
  60. Beled 90:4
  61. Beled 90:5
  62. Beled 90:6
  63. Beled 90:7
  64. Beled 90:8
  65. Beled 90:9
  66. Beled 90:10
  67. Beled 90:11
  68. Beled 90:12
  69. Beled 90:13
  70. Beled 90:14
  71. Beled 90:15
  72. Beled 90:16
  73. Beled 90:17
  74. Beled 90:18
  75. Beled 90:19
  76. Beled 90:20
  77. Şems 91:1
  78. Şems 91:2
  79. Şems 91:3
  80. Şems 91:4
  81. Şems 91:5
  82. Şems 91:6
  83. Şems 91:7
  84. Şems 91:8
  85. Şems 91:9
  86. Şems 91:10
  87. Şems 91:11
  88. Şems 91:12
  89. Şems 91:13
  90. Şems 91:14
  91. Şems 91:15
  92. Leyl 92:1
  93. Leyl 92:2
  94. Leyl 92:3
  95. Leyl 92:4
  96. Leyl 92:5
  97. Leyl 92:6
  98. Leyl 92:7
  99. Leyl 92:8
  100. Leyl 92:9
  101. Leyl 92:10
  102. Leyl 92:11
  103. Leyl 92:12
  104. Leyl 92:13
  105. Leyl 92:14
  106. Leyl 92:15
  107. Leyl 92:16
  108. Leyl 92:17
  109. Leyl 92:18
  110. Leyl 92:19
  111. Leyl 92:20
  112. Leyl 92:21
  113. Duhâ 93:1
  114. Duhâ 93:2
  115. Duhâ 93:3
  116. Duhâ 93:4
  117. Duhâ 93:5
  118. Duhâ 93:6
  119. Duhâ 93:7
  120. Duhâ 93:8
  121. Duhâ 93:9
  122. Duhâ 93:10
  123. Duhâ 93:11
  124. İnşirah 94:1
  125. İnşirah 94:2
  126. İnşirah 94:3
  127. İnşirah 94:4
  128. İnşirah 94:5
  129. İnşirah 94:6
  130. İnşirah 94:7
  131. İnşirah 94:8
  132. Tin 95:1
  133. Tin 95:2
  134. Tin 95:3
  135. Tin 95:4
  136. Tin 95:5
  137. Tin 95:6
  138. Tin 95:7
  139. Tin 95:8
  140. Alak 96:1
  141. Alak 96:2
  142. Alak 96:3
  143. Alak 96:4
  144. Alak 96:5
  145. Alak 96:6
  146. Alak 96:7
  147. Alak 96:8
  148. Alak 96:9
  149. Alak 96:10
  150. Alak 96:11
  151. Alak 96:12
  152. Alak 96:13
  153. Alak 96:14
  154. Alak 96:15
  155. Alak 96:16
  156. Alak 96:17
  157. Alak 96:18
  158. Alak 96:19
  159. Kadr 97:1
  160. Kadr 97:2
  161. Kadr 97:3
  162. Kadr 97:4
  163. Kadr 97:5
  164. Beyyine 98:1
  165. Beyyine 98:2
  166. Beyyine 98:3
  167. Beyyine 98:4
  168. Beyyine 98:5
  169. Beyyine 98:6
  170. Beyyine 98:7
  171. Beyyine 98:8
  172. Zilzal 99:1
  173. Zilzal 99:2
  174. Zilzal 99:3
  175. Zilzal 99:4
  176. Zilzal 99:5
  177. Zilzal 99:6
  178. Zilzal 99:7
  179. Zilzal 99:8
  180. Adiyat 100:1
  181. Adiyat 100:2
  182. Adiyat 100:3
  183. Adiyat 100:4
  184. Adiyat 100:5
  185. Adiyat 100:6
  186. Adiyat 100:7
  187. Adiyat 100:8
  188. Adiyat 100:9
  189. Adiyat 100:10
  190. Adiyat 100:11
  191. Karia 101:1
  192. Karia 101:2
  193. Karia 101:3
  194. Karia 101:4
  195. Karia 101:5
  196. Karia 101:6
  197. Karia 101:7
  198. Karia 101:8
  199. Karia 101:9
  200. Karia 101:10
  201. Karia 101:11
  202. Tekâsür 102:1
  203. Tekâsür 102:2
  204. Tekâsür 102:3
  205. Tekâsür 102:4
  206. Tekâsür 102:5
  207. Tekâsür 102:6
  208. Tekâsür 102:7
  209. Tekâsür 102:8
  210. Asr 103:1
  211. Asr 103:2
  212. Asr 103:3
  213. Hümezeh 104:1
  214. Hümezeh 104:2
  215. Hümezeh 104:3
  216. Hümezeh 104:4
  217. Hümezeh 104:5
  218. Hümezeh 104:6
  219. Hümezeh 104:7
  220. Hümezeh 104:8
  221. Hümezeh 104:9
  222. Fil 105:1
  223. Fil 105:2
  224. Fil 105:3
  225. Fil 105:4
  226. Fil 105:5
  227. Kureyş 106:1
  228. Kureyş 106:2
  229. Kureyş 106:3
  230. Kureyş 106:4
  231. Mâûn 107:1
  232. Mâûn 107:2
  233. Mâûn 107:3
  234. Mâûn 107:4
  235. Mâûn 107:5
  236. Mâûn 107:6
  237. Mâûn 107:7
  238. Kevser 108:1
  239. Kevser 108:2
  240. Kevser 108:3
  241. Kâfirun 109:1
  242. Kâfirun 109:2
  243. Kâfirun 109:3
  244. Kâfirun 109:4
  245. Kâfirun 109:5
  246. Kâfirun 109:6
  247. Nasr 110:1
  248. Nasr 110:2
  249. Nasr 110:3
  250. Tebbet 111:1
  251. Tebbet 111:2
  252. Tebbet 111:3
  253. Tebbet 111:4
  254. Tebbet 111:5
  255. İhlas 112:1
  256. İhlas 112:2
  257. İhlas 112:3
  258. İhlas 112:4
  259. Felak 113:1
  260. Felak 113:2
  261. Felak 113:3
  262. Felak 113:4
  263. Felak 113:5
  264. Nas 114:1
  265. Nas 114:2
  266. Nas 114:3
  267. Nas 114:4
  268. Nas 114:5
  269. Nas 114:6

Gâşiye 88:1

தூதரே!- தன் பயங்கரங்களால் மக்களை சூழ்ந்துகொள்ளக்கூடிய மறுமை நாளின் செய்தி உம்மிடம் வந்ததா?

Gâşiye 88:2

மறுமை நாளில் மனிதர்கள் நற்பாக்கியசாலிகள் அல்லது துர்பாக்கியசாலிகளாக இருப்பார்கள். துர்பாக்கியசாலிகளின் முகங்கள் இழிவடைந்தவையாக, அடிபணிந்தவையாக இருக்கும்.

Gâşiye 88:3

இழுத்துச் செல்லப்படும் சங்கிலிகளாலும் மாட்டப்படும் விலங்குகளாலும் அவை கஷ்டப்பட்டு களைத்துப் போனவையாக இருக்கும்.

Gâşiye 88:4

அந்த முகங்கள் வெப்பமிக்க நெருப்பில் பிரவேசித்து அதன் சூட்டை அனுபவிக்கும்.

Gâşiye 88:5

கடுமையாக கொதிக்கும் நீருற்றிலிருந்து அவர்கள் தண்ணீர் புகட்டப்படுவார்கள்.

Gâşiye 88:6

காய்ந்தால் விஷமாக மாறிவிடும் ஷிப்ரக் என்று சொல்லப்படும் செடியிலிருந்து வழங்கப்படும் அறுவறுப்பான உணவைத்தவிர வேறு எந்த உணவும் அவர்களுக்கு வழங்கப்படாது.

Gâşiye 88:7

அது உண்பவரை கொழுக்க வைக்காது, அவரது பசியையும் போக்காது.

Gâşiye 88:8

அந்நாளில் நற்பாக்கியசாலிகளின் முகங்கள் அருட்கொடைகளைப் பெறுவதனால் பொலிவானவையாக, மகிழ்ச்சியானவையாக, அருள் சொறிந்தவையாக இருக்கும்.

Gâşiye 88:9

உலகில் தாம் செய்த செயல்களைக் கொண்டு அவை திருப்தியடைந்திருக்கும். அவை தமது நற்செயல்களுக்கான கூலி பல மடங்காக சேமிக்கப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளும்.

Gâşiye 88:10

உயர்ந்த அந்தஸ்தும் இடமும் உடைய சுவனத்தில் இருக்கும்.

Gâşiye 88:11

அவை சுவனத்தில் தடைசெய்யப்பட்ட வார்த்தையைச் செவிமடுப்பது ஒரு புறமிருக்க வீணான மற்றும் பொய்யான வார்த்தைகளைச் செவியுறாது.

Gâşiye 88:12

அந்த சுவனத்தில் வெடித்து ஓடக்கூடிய ஓர் நீருற்று இருக்கும். அவர்கள் நாடியவாறு அதனை ஓடச் செய்வார்கள்.

Gâşiye 88:13

அங்கு உயர்ந்த கட்டில்கள்.

Gâşiye 88:14

பருகுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்ட குவளைகளும்.

Gâşiye 88:15

வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட தலையணைகளும்.

Gâşiye 88:16

இங்குமங்கும் விரிக்கப்பட்ட பல அதிகமான விரிப்புக்கள் அதிலுண்டு.

Gâşiye 88:17

ஒட்டகத்தை அல்லாஹ் எவ்வாறு படைத்து அதனை மனிதனுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

Gâşiye 88:18

வானத்தை எவ்வாறு அவர்கள் மீது விழாதவாறு அவர்களுக்கு மேலே பாதுகாப்பான கூரையாக அவன் உயர்த்திவைத்துள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

Gâşiye 88:19

பூமி மக்களால் ஆட்டம் காணாமல் இருக்க எவ்வாறு மலைகளை நட்டி அதனை உறுதிப்படுத்தியுள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

Gâşiye 88:20

பூமியை எவ்வாறு அவன் விரித்து மனித வாழ்வுக்கேற்றவாறு அதனைத் தயார்செய்து வைத்துள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

Gâşiye 88:21

தூதரே! இவர்களுக்கு அறிவுரை வழங்குவீராக. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எச்சரிக்கை செய்வீராக. நீர் அறிவுரை வழங்கக்கூடியவர்தாம். அதைத்தவிர உம்மீது எந்தப் பொறுப்பும் இல்லை. நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது.

Gâşiye 88:22

நீர் அவர்களை நம்பிக்கைகொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதற்கு நீர் அவர்களின் பொறுப்பாளர் அல்ல.

Gâşiye 88:23

ஆயினும் அவர்களில் யார் நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்து அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தாரோ.

Gâşiye 88:24

அல்லாஹ் மறுமைநாளில் அவரை நரகத்தில் நிரந்தரமாக பிரவேசிக்கச் செய்து கடும் வேதனையை அளிப்பான்.

Gâşiye 88:25

நிச்சயமாக அவர்கள் மரணித்தபிறகு நம் பக்கமே திரும்ப வேண்டும்.

Gâşiye 88:26

பின்னர் அவர்களின் செயல்களுக்குக் கணக்கு வாங்குவது நம்மீது மட்டுமுள்ள கடமையாகும். அது உமக்கோ ஏனையவர்களுக்கோ உரியதல்ல.

Fecr 89:1

அல்லாஹ் அதிகாலையைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.

Fecr 89:2

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.

Fecr 89:3

இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படையான பொருட்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.

Fecr 89:4

வந்துவிடும், நீடிக்கும், பின்னோக்கிச் செல்லும் இரவைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். உங்கள் செயல்களுக்கு கூலி வழங்கப்பட்டே தீரும் என்பதுதான் இந்த சத்தியங்களின் பதிலாகும்.

Fecr 89:5

மேற்கூறப்பட்டதில் அறிவாளிக்குப் போதுமான சத்தியம் இல்லையா?

Fecr 89:6

தூதரே!- ஹுத் உடைய மக்கள் தம் தூதர் ஆதை நிராகரித்தபோது உம் இறைவன் அவர்களை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

Fecr 89:7

ஆத் கோத்திரம் தமது உயர்ந்த பாட்டனான இரமுடன் சென்று இணைபவர்கள்.

Fecr 89:8

அவர்களைப் போன்று ஒரு சமூகம் எந்த நாடுகளிலும் படைக்கப்பட்டிருக்கவில்லை.

Fecr 89:9

மலைகளிலுள்ள பாறைகளைக் குடைந்து கற்களால் வீடுகளை அமைத்துக் கொண்ட சாலிஹின் கூட்டமான ஸமூதை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

Fecr 89:10

முளைகளுடைய ஃபிர்அவ்னை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவற்றைக் கொண்டு மக்களை அவன் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

Fecr 89:11

இவர்கள் அனைவரும் அநியாயம் செய்வதில் வரம்புமீறினார்கள். ஒவ்வொருவரும் தம் நாட்டில் வரம்புமீறினார்கள்.

Fecr 89:12

அங்கு நிராகரிப்பான செயல்கள் மற்றும் பாவங்களைப் பரப்பி அதிகம் குழப்பம் விளைவித்தார்கள்.

Fecr 89:13

ஆகவே அல்லாஹ் அவர்களை தனது கடுமையான வேதனையை சுவைக்கச் செய்தான். பூமியிலிருந்து அடியோடு அவர்களை அகற்றிவிட்டான்.

Fecr 89:14

நிச்சயமாக -தூதரே!- உம் இறைவன் அடியார்களின் செயல்களைக் கண்காணிக்கிறான். அது நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு சுவனத்தையும் தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு நரகத்தையும் கூலியாக அளிப்பதற்காகவாகும்.

Fecr 89:15

மனிதனை அல்லாஹ் சோதித்து கண்ணியப்படுத்தினால், அவனுக்கு செல்வத்தையும் குழந்தைகளையும் பதவியையும் வழங்கினால் அது அல்லாஹ்விடமிருந்து தனக்கு அளிக்கும் கண்ணியம் என்று எண்ணிக் கொள்கிறான். “நான் அவனது அருளுக்குத் தகுதியானவன் என்பதால் என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்” என்று கூறுவது மனித இயல்பில் உள்ளதே.

Fecr 89:16

அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரத்தில் நெருக்கடியை வழங்கி அவனை சோதித்தால் அதனை அல்லாஹ் தனக்கு அளிக்கும் இழிவு என்று அவன் நிச்சயமாக எண்ணுகிறான். “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று கூறுகிறான்.

Fecr 89:17

ஒருபோதும் இல்லை. இந்த மனிதன் எண்ணுவதுபோலல்ல விடயம் அருட்கொடை வழங்கப்படுவது அடியானின் மீது அல்லாஹ்வுடைய திருப்தியின் அடையாளமோ துன்பங்கள் அவன் அளிக்கும் இழிவின் அடையாளமோ அல்ல. உண்மையில் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாழ்வாதாரத்திலிருந்து அநாதைகளுக்கு வழங்கி அவர்களைக் கண்ணியப்படுத்துவுமில்லை

Fecr 89:18

நீங்கள் ஒருவருக்கொருவர் உண்ண வழியற்ற ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டுவதுமில்லை.

Fecr 89:19

மாறாக பெண்கள், அநாதைகள் போன்ற பலவீனர்களின் உரிமைகளை அது ஹலாலானதா எனக் கவனிக்காமல் முழுமையாக சாப்பிட்டு விடுகிறீர்கள்.

Fecr 89:20

செல்வத்தின்மீது அளவுகடந்து மோகம் கொண்டு அதனை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யாமல் கஞ்சத்தனம் செய்கிறீர்கள்.

Fecr 89:21

உங்களின் செயல் இவ்வாறு இருப்பது உகந்ததல்ல. பூமி பலமாக உலுக்கப்படும்போது.

Fecr 89:22

தூதரே!- உம் இறைவன் தன் அடியார்களிடையே தீர்ப்பளிப்பதற்காக வருவான். வானவர்களும் அணிவகுத்து வருவார்கள்.

Fecr 89:23

அந்த நாளில் நரகம் கொண்டுவரப்படும். அதற்கு எழுபதாயிரம் கடிவாளங்கள் இருக்கும். ஒவ்வொரு கயிற்றையும் எழுபதாயிரம் வானவர்கள் இழுத்துக் கொண்டு வருவார்கள். அந்ந நாளில் மனிதன் அல்லாஹ்வின் விஷயத்தில் தான் செய்த தவறுகளை நினைத்துப் பார்ப்பான். நிச்சயமாக அந்ந நாளில் நினைத்துப் பார்ப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது. ஏனெனில் திட்டமாக அது கூலி வழங்கப்படும் நாளாகும். செயல்படும் நாளல்ல.

Fecr 89:24

அப்போது அவன் கடும் வேதனையுடன் கூறுவான்: “அந்தோ! உண்மையான வாழ்க்கையான என் மறுமை வாழ்க்கைக்காக நான் நற்செயல்களை முற்படுத்தியிருக்க வேண்டுமே!”

Fecr 89:25

அந்த நாளில் அல்லாஹ் தண்டிப்பதுபோன்று யாரும் தண்டிக்க முடியாது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனை கடுமையானது, நிலையானது.

Fecr 89:26

அவன் நிராகரிப்பாளர்களை சங்கிலிகளால் கட்டுவதுபோன்று வேறு யாரும் கட்ட முடியாது.

Fecr 89:27

நம்பிக்கைகொண்ட ஆன்மாவிடம் அது மரணிக்கும் போதும் மறுமை நாளிலும் கூறப்படும்: “நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்து திருப்தியடைந்த ஆன்மாவே!

Fecr 89:28

நீ உனது இறைவனிடமிருந்து பெறும் உயரிய நன்மையைக் கொண்டு திருப்தியடைந்த நிலையில், உன்னிடம் காணப்படும் நற்செயல்களினால் அவனது திருப்தியை அடைந்த நிலையிலும் உன் இறைவனின்பால் செல்.

Fecr 89:29

என்னுடைய நல்லடியார்களின் அணியில் பிரவேசித்து விடுவாயாக.

Fecr 89:30

அவர்களுடன் நான் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள எனது சுவனத்தில் பிரவேசித்து விடுவாயாக.

Beled 90:1

அல்லாஹ் மக்கா என்னும் புனித நகரத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.

Beled 90:2

தூதரே!- நீர் அங்கு செய்பவை கொல்லப்படத் தகுதியானவர்களைக் கொன்றது, கைதிகளாகப் பிடிக்கப்படத் தகுதியானவர்களை கைதிகளாகப் பிடித்தது உமக்கு அனுமதிக்கப்பட்டவையாகும்.

Beled 90:3

அல்லாஹ் மனிதஇனத் தந்தையைக் கொண்டும் அவனிலிருந்து தோன்றும் சந்ததியைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.

Beled 90:4

மனிதன் இவ்வுலகில் அனுபவிக்கும் சிரமங்களினால் அவனைக் கஷ்டத்திலும் சிரமத்திலும் நாம் படைத்தோம்.

Beled 90:5

தான் பாவங்களை சம்பாதித்தால் தனக்கெதிராக யாரும் சக்திபெற மாட்டார்கள், தன்னை யாராலும் அது அவனைப் படைத்த இறைவனாக இருந்தாலும் தண்டிக்க முடியாது என்று நிச்சயமாக மனிதன் எண்ணிக்கொண்டானா?

Beled 90:6

அவன் கூறுகிறான்: “நான் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன், என்று.”

Beled 90:7

தான் செலவழித்ததைக்கொண்டு பெருமையடிக்கும் மனிதன் தன்னை அல்லாஹ் பார்க்கவில்லை என்றும் தன் செல்வங்களில், தான் சம்பாதித்தது குறித்தும் செலவுசெய்தது குறித்தும் அவன் கணக்குக் கேட்க மாட்டான் என்றும் எண்ணிக் கொண்டானா?

Beled 90:8

நாம் அவனுக்கு பார்க்கக்கூடிய இரு கண்களை ஆக்கவில்லையா?

Beled 90:9

பேசக்கூடிய ஒரு நாவையும் இரு உதடுகளையும் (ஆக்கவில்லையா?)

Beled 90:10

நாம் அவனுக்கு நன்மையின் பாதையையும் அசத்தியப் பாதையையும் அறிவித்துக் கொடுக்கவில்லையா?

Beled 90:11

அவன் சுவனத்தை விட்டும் பிரிக்கும் கணவாயைக் கடக்குமாறு வேண்டப்படுவான்.

Beled 90:12

தூதரே!- சுவனம் செல்வதற்குக் கடக்க வேண்டிய கணவாயைக் குறித்து உமக்கு அறிவித்தது எது?

Beled 90:13

அது ஆண் அல்லது பெண் அடிமையை விடுதலை செய்வதாகும்.

Beled 90:14

அல்லது உணவு கிடைப்பது அரிதான பசி, பட்டினியுடைய நாளில் உணவளிப்பதாகும்,

Beled 90:15

தந்தையை இழந்த உறவுக்கார குழந்தைக்கோ.

Beled 90:16

அல்லது எதுவும் சொந்தம் இல்லாத ஏழைக்கோ ஆகும்.

Beled 90:17

பின்னர் அவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு வணக்கவழிபாடுகளைச் செய்வதிலும் பாவங்களிலிருந்து விலகியிருப்பதிலும் கஷ்டங்களிலும் பொறுமையைக் கடைபிடிக்கும்படியும் அவனுடைய அடியார்களுடன் பொறுமையாக நடந்துகொள்ளும்படியும், கிருபையைக்கொண்டும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுபவர்களில் உள்ளவராக இருப்பார்.

Beled 90:18

இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் வலதுபுறத்தில் உள்ளவர்களாவர்.

Beled 90:19

நம் தூதர்மீது இறக்கப்பட்ட நம் வசனங்களை நிராகரிப்பவர்கள்தாம் இடதுபுறத்தில் உள்ளவர்களாவர்.

Beled 90:20

மறுமை நாளில் அவர்களின்மீது மூடப்பட்டுள்ள நெருப்பு இருக்கும். அதில் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள்.

Şems 91:1

அல்லாஹ் சூரியனைக் கொண்டும் கிழக்கிலிருந்து அது உதயமாகி உயர்ந்து செல்லும் நேரத்தைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.

Şems 91:2

அது மறைந்தபிறகு அதனைப் பின்தொடர்ந்து வரும் சந்திரனைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Şems 91:3

தன் ஒளியின் மூலம் பூமியின் மேற்பரப்பில் உள்ளவற்றை வெளிப்படுத்தும் பகலைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Şems 91:4

பூமியின் மேற்பரப்பைச் சூழ்ந்து அது இருளாகிவிடும் இரவைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Şems 91:5

வானத்தைக் கொண்டும் அதன் உறுதியான கட்டமைப்பைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Şems 91:6

பூமியைக் கொண்டும் அதனை மனிதன் வசிப்பதற்கேற்ப விரித்ததைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Şems 91:7

ஒவ்வொரு ஆன்மாவைக் கொண்டும் அதனை அவன் செம்மையாக படைத்ததைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.

Şems 91:8

தவிர்ந்திருப்பதற்கு தீமையையும், செய்வதற்கு நன்மையையும் கற்காமல் உள்ளுதிப்பின் மூலம் அதற்கு அவன் உணர்த்தியுள்ளான்.

Şems 91:9

தன் ஆன்மாவை தீயவற்றிலிருந்து நீக்கி நற்பண்புகளால் அலங்கரித்து தூய்மைப்படுத்திக் கொண்டவர் வேண்டியதை பெற்று வெற்றியடைந்து விட்டார்.

Şems 91:10

அதனைப் பாவங்களால் களங்கப்படுத்தியவர் தோல்வியடைந்து விட்டார்.

Şems 91:11

ஸமூத் சமூகத்தினர் வரம்புமீறி பாவங்களில் ஈடுபட்டதன் காரணமாக தம் தூதர் ஸாலிஹை பொய்ப்பித்தார்கள்.

Şems 91:12

அவர்களில் துர்பாக்கியவான் தன் சமூகம் அவனை அழைத்த பிறகு எழுந்து நின்றபோது.

Şems 91:13

அல்லாஹ்வின் தூதர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வின் ஒட்டகத்தை விட்டுவிடுங்கள். அது ஒருநாள் தண்ணீர் அருந்தட்டும். அதற்கு எவ்வித தீங்கும் இழைக்காதீர்கள்.”

Şems 91:14

அவர்கள் ஒட்டகம் விஷயத்தில் தங்களின் தூதரை பொய்ப்பித்தார்கள். அவர்களில் துர்பாக்கியவான் அவர்களின் சம்மதத்துடன் அந்த ஒட்டகத்தைக் கொன்றுவிட்டான். எனவே அவர்களும் பாவத்தில் பங்காளிகளாக இருந்தார்கள். ஆகவே அல்லாஹ் அவர்கள் மீது தன் வேதனையைச் சாட்டினான். அவர்களின் பாவங்களின் காரணமாக பெரும் சப்தத்தால் அவர்களை அழித்துவிட்டான். அவன் அழித்த தண்டனையில் அவர்களை சமமானவர்களாக்கிவிட்டான்.

Şems 91:15

அவர்களை அழித்து தண்டனை செய்த அல்லாஹ் அதன் விளைவைக் குறித்து அஞ்சவில்லை.

Leyl 92:1

அல்லாஹ் இரவைக்கொண்டு சத்தியம் செய்கின்றான், அது வானத்திற்கும் பூமிக்குமிடையே தன் இருளைக் கொண்டு மூடிவிடும்போது

Leyl 92:2

பகலைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான், அது வெளிப்பட்டுவிடும்போது,

Leyl 92:3

ஆண், பெண் என்ற இருவகைகளை அவன் படைத்ததைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Leyl 92:4

மனிதர்களே!- நிச்சயமாக உங்களின் செயல்கள் பலவாறாக இருக்கின்றன. அவற்றுள் சில சுவனத்தில் நுழைவிக்க காரணமாக இருக்கும் நற்செயல்களாக இருக்கின்றன. சில நரகத்தில் நுழைய காரணமாக இருக்கும் தீயசெயல்களாக இருக்கின்றன.

Leyl 92:5

யார் தான் செலவழிக்க வேண்டிய தர்மம், பரிகாரம், ஸகாத் போன்றவற்றை கொடுத்து அல்லாஹ் தடுத்துள்ளதைவிட்டும் பயந்து தவிர்ந்திருக்கிறாரோ.

Leyl 92:6

அல்லாஹ் பகரம் வழங்குவதாக வாக்களித்ததை உண்மையென ஏற்றுக்கொள்கிறாரோ.

Leyl 92:7

நாம் அவருக்கு நற்செயல் புரிவதையும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்வதையும் எளிதாக்கித் தருவோம்.

Leyl 92:8

யார் செலவழிக்க வேண்டிய அவசியமானவற்றில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வாரோ, அல்லாஹ்விடம் அவனின் அருளில் எதையும் கேட்காமல் தன் செல்வங்களைக் கொண்டு தேவையற்றிருப்பாரோ.

Leyl 92:9

தனது செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவளித்ததற்கு அல்லாஹ் வாக்களித்திருக்கும் பகரத்தையும் கூலியையம் மறுப்பாரோ.

Leyl 92:10

நாம் அவருக்குத் தீயதை இலகுபடுத்தி நலவு புரிவதை கடினமாக்கிவிடுவோம்.

Leyl 92:11

அவன் அழிந்து நரகத்தில் நுழைந்துவிட்டால் அவன் கஞ்சத்தனம் செய்தவை அவனுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.

Leyl 92:12

நிச்சயமாக அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதையை தெளிவுபடுத்துவது நம்மீதுள்ள கடமையாகும்.

Leyl 92:13

நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையும் மறுவுலக வாழ்க்கையும் நமக்கே உரியதாகும். அவற்றில் நாம் விரும்பியவாறு செயல்படுகின்றோம். நம்மைத்தவிர வேறு யாருக்கும் அது உரியதல்ல.

Leyl 92:14

மக்களே!- நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறாகச் செயல்பட்டால் எரியக்கூடிய நரகத்தைவிட்டும் நான் உங்களை எச்சரித்துவிட்டேன்.

Leyl 92:15

துர்பாக்கியசாலியான நிராகரிப்பாளன்தான் இந்த நரகத்தின் வெப்பத்தை அனுபவிப்பான்.

Leyl 92:16

அவன் தூதர் கொண்டுவந்ததை பொய் எனக் கூறினான். அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் புறக்கணித்தான்.

Leyl 92:17

அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடியவரான அபூபக்கர் (ரலி) அதனைவிட்டும் தூரமாக்கப்பட்டுவிடுவார்.

Leyl 92:18

அவர் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக தம் செல்வங்களை நல்வழிகளில் செலவு செய்கிறார்.

Leyl 92:19

தன்மீது அருள்புரிந்த ஒருவருக்கு பிரதியுபகாரம் செய்வதற்காக அவர் தம் செல்வத்தை செலவுசெய்யவில்லை.

Leyl 92:20

தான் செலவழிக்கும் செல்வத்தின் மூலம் அவர் தனது படைப்பின் மேலே உயர்ந்துள்ள அல்லாஹ்வின் திருமுகத்தையே நாடுகின்றார்.

Leyl 92:21

அல்லாஹ் அவருக்கு அளிக்கும் கண்ணியமான கூலியைக் கொண்டு அவர் விரைவில் திருப்தியடைவார்.

Duhâ 93:1

அல்லாஹ் முற்பகலைக்கொண்டு சத்தியம் செய்கின்றான்.

Duhâ 93:2

அவன் இரவைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். அது இருளாகி மக்கள் நடமாடுவதை விட்டும் ஓய்வெடுக்கும் போது,

Duhâ 93:3

தூதரே!- வஹி குறிப்பிட்ட காலம்வரை வராமல் இருந்ததனால் இணைவைப்பாளர்கள் கூறுவதுபோன்று உம் இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை, வெறுக்கவுமில்லை.

Duhâ 93:4

என்றும் முடிவுடையாத நிலையான இன்பத்தைக் கொண்டிருப்பதால் மறுமையின் வீடே உமக்கு உலகத்தைவிடச் சிறந்ததாகும்.

Duhâ 93:5

விரைவில் உம் இறைவன் உமக்கும் உம் சமூகத்திற்கும் அவன் கொடுத்ததைக்கொண்டு நீர் திருப்தியடையும் வகையில் பெரும் நன்மைகளை உமக்கும் உமது சமூகத்திற்கும் வழங்குவான்.

Duhâ 93:6

நீர் அநாதையாக இருப்பதைக் கண்டு உமக்கு ஒரு புகலிடத்தை ஏற்படுத்தினான். உம்மீது உம் பாட்டனார் அப்துல் முத்தலிபும் பின்னர் சிறிய தந்தை அபூதாலிபும் அன்பு செலுத்தினார்கள்.

Duhâ 93:7

ஈமான் என்றால் என்ன? வேதம் என்றால் என்ன? என்பதை அறியாதவராக உம்மைக் கண்ட அவன், நீர் அறியாமல் இருந்தவற்றையெல்லாம் உமக்குக் கற்றுக் கொடுத்தான்.

Duhâ 93:8

உம்மைத் தேவையுடையவராகக் கண்டு, உம்மைத் வசதியுடையவராக ஆக்கினான்.

Duhâ 93:9

ஆகவே சிறுவயதில் தந்தையை இழந்தவரிடம் மோசமாக நடந்துகொள்ளாதீர். அவனை இழிவுபடுத்திவிடாதீர்.

Duhâ 93:10

தேவையோடு யாசிப்பவரை விரட்டிவிடாதீர்.

Duhâ 93:11

அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவீராக. அவற்றை எடுத்துரைப்பீராக.

İnşirah 94:1

உமது உள்ளத்தைத் உமக்கு விரிவுபடுத்தி, வஹியைப் பெறுவதை உமக்கு விருப்பத்திற்குரியாதாக மாற்றினோம்.

İnşirah 94:2

உமது முன்னைய பாவங்களை உமக்கு மன்னித்துவிட்டோம். உம்மீதிருந்த அறியாமைக்கால சுமையை உம்மை விட்டும் இறக்கிவிட்டோம்.

İnşirah 94:3

உமது முதுகை உடைத்துவிடும் அளவுக்கு அது உம்மை சிரமப்படுத்தியிருந்தது.

İnşirah 94:4

மேலும் நாம் உம் புகழை உயர்த்தினோம். பாங்கு, இகாமத் மற்றும் இன்னபிறவற்றிலும் நீர் நினைவுகூறப்படுகிறவராக மாறிவிட்டீர்.

İnşirah 94:5

ஆகவே நிச்சயமாக நெருக்கடி, கஷ்டத்துடனே விரிவும் இலகுவும் நிவாரணமும் இருக்கிறது.

İnşirah 94:6

நிச்சயமாக நெருக்குதல், கஷ்டத்துடனே விரிவும், இலகுவும், நிவாரணமும் இருக்கிறது. நீர் அதனை அறிந்தால் உம் சமூகம் உமக்கு அளிக்கும் துன்பங்கள், உமக்குப் பெரிதாகத் தெரியாது. அது அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை விட்டும் உம்மைத் தடுக்கவும் மாட்டாது.

İnşirah 94:7

நீர் உம் பணிகளிலிருந்து விடுபட்டவுடன் உம் இறைவனை வணங்குவதில் முழு முயற்சி செய்வீராக.

İnşirah 94:8

உம் ஆர்வத்தையும் விருப்பத்தையும் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே அமைத்துக் கொள்வீராக.

Tin 95:1

அல்லாஹ் அத்தியின் மீதும் அது விளையும் இடத்தின் மீதும் சைத்தூனின் மீதும் ஈஸா அலை அவர்கள் அனுப்பப்பட்ட பலஸ்தீனில் அது விளையும் இடத்தின் மீதும் சத்தியம் செய்கின்றான்.

Tin 95:2

அவன் தன் நபி மூஸாவுடன் இரகசியமாகப் பேசிய சீனாய் மலையைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.

Tin 95:3

நபியவர்கள் அனுப்பப்பட்ட, அதன் உள்ளே நுழைபவர் பாதுகாப்பைப் பெறும் புனித பூமியான மக்காவைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

Tin 95:4

நாம் மனிதனை நேர்த்தியான முறையிலும் அழகிய தோற்றத்திலும் படைத்தோம்.

Tin 95:5

பின்னர் உலகில் அவனை வயோதிபம் மற்றும் அதனால் ஏற்படும் புத்திக்கோளாறின்பால் திருப்பிவிட்டோம். எனவே இயல்பை சீரழித்து நரகிற்கு சென்றுவிட்டவன் அதன் மூலம் எவ்விதப் பயனும் பெறாததைப் போல் அவனும் தனது உடல் மூலம் எந்தப் பலனையும் அடையமுடியாது.

Tin 95:6

ஆயினும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் வயோதிபத்தை அடைந்தாலும் நாம் அவர்களுக்கு சுவனம் என்னும் என்றும் முடிவுறாத நிலையான நன்மையை வழங்குவோம். ஏனெனில் அவர்கள் தமது இயல்புகளை பரிசுத்தப்படுத்தினர்.

Tin 95:7

மனிதனே!- அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் ஏராளமான சான்றுகளை நீ கண்ட பின்னரும் எது உன்னை கூலி கொடுக்கப்படும் நாளை பொய்ப்பிக்கத் தூண்டுகிறது.

Tin 95:8

அல்லாஹ் -கூலி கொடுக்கப்படும் நாளை மறுமையில் ஏற்படுத்தியதன் மூலம்- தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் மிகச்சிறந்த தீர்ப்பளிப்பாளன், நீதியாளன் இல்லையா? நன்மை செய்தவர்களுக்கு நற்கூலியும் தீமை செய்தவர்களுக்குத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்காமல் அவனது அடியார்களை அல்லாஹ் அப்படியே விட்டுவிடுவது அறிவுப்பூர்வமானதா என்ன?

Alak 96:1

தூதரே!- படைப்புகள் அனைத்தையும் படைத்த உம் இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்து உம் இறைவன் உமக்கு வஹியாக அறிவிப்பதை படிப்பீராக.

Alak 96:2

அவன் மனிதனை விந்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்.

Alak 96:3

தூதரே!- அல்லாஹ் உமக்கு வஹியாக அறிவிப்பதைப் படிப்பீராக. உம் இறைவன் மிகப் பெரும் கொடையாளன். அவனது கொடையை எந்தக் கொடைவள்ளலாலும் நெருங்க முடியாது. ஏனெனில் அவன் பெரும் கொடையாளனாக, நலவு புரிபவனாக இருக்கின்றான்.

Alak 96:4

அவன் மனிதனுக்கு எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான்.

Alak 96:5

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

Alak 96:6

உண்மையிலேயே அபூஜஹ்லைப் போன்ற பாவியான மனிதன் நிச்சயமாக அல்லாஹ்வின் வரம்புகளை மீறுதில் எல்லை கடந்துவிட்டான்.

Alak 96:7

தன்னிடமுள்ள பதவியையும் செல்வங்களையும் கொண்டு அவன் தன்னைத் தேவையற்றவன் என்று கருதியதால்.

Alak 96:8

மனிதனே!- நிச்சயமாக மறுமை நாளில் உன் இறைவனின் பக்கமே நீ திரும்ப வேண்டும். அவன் ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலியை வழங்குவான்.

Alak 96:9

(எமது அடியார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழும் போது) தடுக்கும் அபூஜஹ்லின் செயலை விட ஆச்சரியமானதை நீர் கண்டுள்ளீரா?

Alak 96:10

எமது அடியார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழும் போது.

Alak 96:11

நீர் பார்த்தீரா? இவ்வாறு தடுக்கப்பட்டவர் தம் இறைவனிடமிருந்து வந்துள்ள நேர்வழியில் இருந்தாலுமா?

Alak 96:12

அல்லது அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள் என்று மக்களுக்கு ஏவக்கூடியவராக இருந்தாலுமா? இப்படிப்பட்டவர் தடுக்கப்படலாமா?

Alak 96:13

நீர் பார்த்தீரா? இவ்வாறு தடுக்கக்கூடியவன் தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பித்து புறக்கணித்தாலுமா? அவன் அல்லாஹ்வை அஞ்சவில்லையா?

Alak 96:14

தொழுகையை விட்டும் அந்த அடியாரை தடுக்கக்கூடியவன் அவன் செய்யும் செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை என்பதையும் அறியவில்லையா?

Alak 96:15

இந்த மூடன் எண்ணுவது போலல்ல விடயம். அவன் நம் அடியாரைத் துன்புறுத்துவதையும் பொய்ப்பிப்பதையும் நிறுத்திக்கொள்ளவில்லையெனில் நாம் அவனது நெற்றி முடியை கொடூரமாகப் பிடித்து இழுத்து நரகத்தில் தள்ளிடுவோம்.

Alak 96:16

அந்த நெற்றி முடி உடையவன் சொல்லில் பொய் சொல்லக்கூடியவன், செயலில் தவறிழைக்கக்கூடியவன்.

Alak 96:17

அவனது நெற்றிமுடி பிடிக்கப்பட்டு அவன் நரகத்தில் தள்ளப்படும்போது தன்னை வேதனையிலிருந்து காப்பாற்றி உதவி புரிவதற்காக தன் தோழர்களையும் அவையினரையும் அவன் அழைக்கட்டும்.

Alak 96:18

நாமும் நரகத்தின் காவலர்களான கடுமையான வானவர்களை அழைப்போம். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட மாட்டார்கள். தங்களுக்கு இடப்படும் கட்டளைகளைச் செயல்படுத்துகிறார்கள். எனவே இரு பிரிவினரில் யார் பலம்வாய்ந்தவர், சக்தி பெற்றவர் என்பதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

Alak 96:19

இந்த அநியாயக்காரன் எண்ணுவது போலல்ல விடயம். அவன் உமக்குத் தீங்கிழைத்துவிட முடியாது. எனவே அவனுக்கு நீர் ஏவலிலும் விலக்கலிலும் கட்டுப்படாதீர். அல்லாஹ்வுக்குச் சிரம்பணிவீராக. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் மூலம் அவனை நெருங்குவீராக. நிச்சயமாக அவனுக்குக் கட்டுப்படுவது அவன் பக்கம் நெருக்கி வைக்கும்.

Kadr 97:1

நிச்சயமாக நாம் ரமலான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்னும் கண்ணியமிக்க இரவிலே தூதரின் மீது இக்குர்ஆனை நாம் இறக்கத் தொடங்கியது போன்றே அதனை முழுமையாக கீழ் வானத்திற்கு இறக்கிவைத்தோம்.

Kadr 97:2

நபியே!- அந்த இரவில் அடங்கியுள்ள நன்மையையும் அருள்வளங்களையும் பற்றி உமக்குத் தெரியுமா?

Kadr 97:3

அந்த இரவு மகத்தான நன்மைகளுடைய இரவாகும். அந்த இரவில் நம்பிக்கையுடனும் கூலியை எதிர்பார்த்தும் நின்று வணங்கக்கூடியவர்களுக்கு அது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்.

Kadr 97:4

வானவர்களும் ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு அவன் அந்த வருடத்தில் விதித்த பிறப்பு, இறப்பு, வாழ்வாதாரம் மற்றும் இன்னபிற விஷயங்கள் தொடர்பான அனைத்துக் கட்டளைகளையும் கொண்டு இறங்குகிறார்கள்.

Kadr 97:5

அருள்வளமிக்க அந்த இரவு ஆரம்பம் முதல் அதிகாலை உதயமாகி அதன் முடிவுவரை முழுக்க முழுக்க நன்மையானதாகும்.

Beyyine 98:1

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள் ஆகியோரிலுள்ள நிராகரிப்பாளர்கள் பிரிவுபட்டவர்களாக தாங்கள் ஒன்றுபட்டுள்ள நிராகரிப்பை தெளிவான ஆதாரம் தங்களிடம் வரும்வரை விட்டுவிடக்கூடியவர்கள் அல்ல.

Beyyine 98:2

இந்த தெளிவான ஆதாரம் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையானவர்கள் மட்டுமே தொடக்கூடிய பரிசுத்தமான வேதங்களை ஓதுபவராக அவரை அனுப்பினான்.

Beyyine 98:3

அந்த வேதங்களில் உண்மையான செய்திகளும் நீதிமிக்க சட்டங்களும் இருக்கின்றன. அவை மக்களுக்கு நேர்வழி, நன்மையின் பக்கம் வழிகாட்டுகின்றன.

Beyyine 98:4

தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் அல்லாஹ் தங்களிடம் நபியை அனுப்பிய பின்னரே கருத்துவேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். சிலர் நபி உண்மையானவர் என்பதை அறிந்துகொண்டே நிராகரிப்பில் நிலைத்திருந்தார்கள்.

Beyyine 98:5

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பிடிவாதம் பின்வரும் விஷயத்தில் வெளிப்படுகிறது. அவர்கள் தங்களின் வேதங்களில் ஏவப்பட்டுள்ளவாறே - அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனுக்கு இணையாக்குவதை விட்டும் தவிர்ந்து இருக்க வேண்டும், தொழுகை நிலைநாட்ட வேண்டும், ஸகாத்தை வழங்க வேண்டும் என்றுதான் இந்த குர்ஆனிலும் ஏவப்பட்டுள்ளார்கள். அவர்கள் எதைக் கொண்டு ஏவப்பட்டுள்ளார்களோ அதுதான் எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமாகும்.

Beyyine 98:6

நிச்சயமாக -யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் முஷ்ரிக்குகளிலும்- எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் மறுமை நாளில் நரகில் நுழைவார்கள். அதில் என்றென்றும் இருப்பார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்ததனால் படைப்பினங்களில் மிகவும் மோசமானவர்களாவர்.

Beyyine 98:7

நிச்சயமாக அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்கள்தாம் படைப்பினங்களில் சிறந்தவர்களாவர்.

Beyyine 98:8

அவர்களின் இறைவனிடத்தில் அவர்கள் பெறும் கூலி சுவனங்களாகும். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் நம்பிக்கைகொண்டு கட்டுப்பட்டதனால் அல்லாஹ் அவர்களின் விஷயத்தில் திருப்தியடைந்தான். தாங்கள் பெற்ற அவனது அருளைக் கொண்டு அவர்களும் திருப்தியடைந்தார்கள். இந்த அருட்கொடையை தன் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவரே பெறமுடியும்.

Zilzal 99:1

மறுமை நாள் நிகழும் சந்தர்ப்பத்தில் பூமி பலமாக உலுக்கப்படும் போது

Zilzal 99:2

அது தன்னுள் இருக்கும் இறந்தவர்களையும் ஏனையவற்றையும் வெளியேற்றிவிடும்.

Zilzal 99:3

மனிதன் தடுமாற்றமடைந்தவனாகக் கேட்பான்: “ஏன் இந்த பூமி ஆட்டம் காணுகிறது?”

Zilzal 99:4

அந்த மாபெரும் நாளில் அது தன்மீது நிகழ்ந்த நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்தையும் அறிவித்துவிடும்.

Zilzal 99:5

ஏனெனில் அல்லாஹ் அதற்கு அவற்றை அறிவித்துக்கொடுத்து அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.

Zilzal 99:6

பூமி உலுக்கப்படும் அந்த மாபெரும் நாளில் மக்கள் விசாரணை நிலையத்திலிருந்து உலகில் தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக குழு குழுவாக வெளியேறி வருவார்கள்.

Zilzal 99:7

யார் சிறிய எறும்பு அளவு நற்செயல் புரிந்திருப்பாரோ அதனை அவர் தனக்கு முன்னால் காண்பார்.

Zilzal 99:8

யார் ஒரு சிறு எறும்பின் அளவு தீய செயல் செய்தாரோ அதனை அவ்வாறே காண்பார்.

Adiyat 100:1

வேகமாக மூச்சிறைத்து சத்தத்தை வெளிப்படுத்தி ஓடும் குதிரைகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.

Adiyat 100:2

தன் குளம்புகளால் பாறைகளில் கடுமையாக உரசுவதால் தீப்பொறியை உண்டாக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.

Adiyat 100:3

அதிகாலை நேரத்தில் எதிரிகளின்மீது தாக்குதல் தொடுக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.

Adiyat 100:4

அவை தாம் ஓடும்போது புழுதியைக் கிளப்புகின்றன.

Adiyat 100:5

வீரர்களுடன் அவை எதிரிகளிடையே கூட்டமாக நுழைந்து விடுகின்றன.

Adiyat 100:6

நிச்சயமாக மனிதன் தன் இறைவன் தன்னிடமிருந்து விரும்பும் நன்மையை தடுத்துக்கொள்ளக் கூடியவனாக இருக்கின்றான்.

Adiyat 100:7

அவன் நன்மையைத் தடுப்பதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கின்றான். அது தெளிவாக இருப்பதால் அவனால் அதனை மறுக்க முடியாது.

Adiyat 100:8

நிச்சயமாக அவன் செல்வத்தின் மீதுள்ள மோகத்தினால் அதில் கஞ்சத்தனம் செய்கிறான்.

Adiyat 100:9

இவ்வுலக வாழ்க்கையில் மயங்கிய இந்த மனிதன், அல்லாஹ் மண்ணறைகளில் உள்ளவர்களை உயிர்கொடுத்து எழுப்பி, பூமியிலிருந்து அவர்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் வெளியேற்றும் போது விஷயம் அவன் எண்ணியது போல் இருக்காது என்பதை அறியவில்லையா?

Adiyat 100:10

உள்ளங்களிலுள்ள எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற விஷயங்களெல்லாம் வெளிப்படுத்தப்படும் தெளிவாக்கப்படும்.

Adiyat 100:11

நிச்சயமாக அந்த நாளில் அவர்களின் இறைவன் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். தன் அடியார்களின் விடயம் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அதற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.

Karia 101:1

மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம்

Karia 101:2

மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம் (என்றால்) என்ன?

Karia 101:3

தூதரே!- மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரத்தைப் பற்றி உமக்கு அறிவித்தது எது? நிச்சயமாக அது மறுமை நாளாகும்.

Karia 101:4

மக்களின் உள்ளங்களை திடுக்கிடச் செய்யும் அந்த நாளில் அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுண்டு பரந்த ஈசல்களைப்போன்று ஆகிவிடுவார்கள்.

Karia 101:5

மலைகள் கடையப்பட்ட பஞ்சைப் போன்று அதன் எளிதாக நகரும்.

Karia 101:6

யாருடைய நற்செயல்கள் அவருடைய தீய செயல்களைவிட கனமாகிவிட்டனவோ.

Karia 101:7

அவர் சுவனத்தில் திருப்தியான வாழ்க்கையை பெற்றிருப்பார்.

Karia 101:8

யாருடைய தீய செயல்கள் அவருடைய நற்செயல்களைவிட கனமாகிவிட்டனவோ,

Karia 101:9

மறுமை நாளில் அவரது தங்குமிடம் நரகமாகும்.

Karia 101:10

தூதரே!- அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

Karia 101:11

அது கடும் வெப்பமுடைய நெருப்பாகும்.

Tekâsür 102:1

மனிதர்களே!- செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமையடிப்பது உங்களை அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட்டும் திருப்பிவிட்டது.

Tekâsür 102:2

நீங்கள் மரணித்து மண்ணறையில் நுழையும் வரை.

Tekâsür 102:3

அவற்றைக் கொண்டு பெருமையடிப்பது அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதை விட்டும் உங்களைத் திருப்பிவிடக் கூடாது. அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.

Tekâsür 102:4

பின்னர் அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.

Tekâsür 102:5

நிச்சயமாக உங்களை அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி திட்டமாக உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்திருந்தால் செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் பெருமைடிப்பதில் ஈடுபடமாட்டீர்கள்.

Tekâsür 102:6

நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் நரகத்தை காண்பீர்கள்.

Tekâsür 102:7

பின்னர் அதனை எவ்வித சந்தேகமுமின்றி உறுதியாகக் காண்பீர்கள்.

Tekâsür 102:8

பின்னர் அந்த நாளில் அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த ஆரோக்கியம் செல்வம் இன்னபிற அருட்கொடைகளைக் குறித்து உங்களிடம் கேள்வி கேட்பான்.

Asr 103:1

அல்லாஹ் அஸர் நேரத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.

Asr 103:2

நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலும் அழிவிலும் இருக்கின்றான்.

Asr 103:3

ஆயினும் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து ஒருவருக்கொருவர் சத்தியத்தைக் கொண்டும் சத்தியத்தில் பொறுமையாக நிலைத்திருக்கும்படியும் அறிவுரை கூறியவர்களைத் தவிர. இந்தப் பண்புகளை உடையவர்கள் ஈருலகிலும் தப்பியவர்களாவார்கள்.

Hümezeh 104:1

மக்களைப் பற்றி அதிகம் புறம்பேசி குறைகூறித் திரிபவர்களுக்கு கடும் வேதனையும் கேடும்தான் உண்டாகும்.

Hümezeh 104:2

அவனது கவலை செல்வத்தை சேகரிப்பதும் அதனை எண்ணி எண்ணி பாதுகாப்பதும்தான். அதனைத் தவிர வேறு கவலை அவனுக்கு இல்லை.

Hümezeh 104:3

தான் சேகரித்த செல்வங்கள் தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும் என்றும் இவ்வுலக வாழ்க்கையில் நிரந்தரமாக வாழ முடியும் என்றும் அவன் எண்ணுகிறான்.

Hümezeh 104:4

இந்த மடையன் எண்ணுவது போலல்ல விடயம். தன்னில் வீசப்படும் அனைத்தையும் தனது கடுமையான சோதனையால் நசுக்கி உடைத்து விடும் நரக நெருப்பில் அவன் நிச்சயம் வீசப்படுவான்.

Hümezeh 104:5

தூதரே!- தன்னில் எறியப்படும் அனைத்தையும் நசுக்கிவிடும் நரக நெருப்பு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

Hümezeh 104:6

நிச்சயமாக அது எரியக்கூடிய அல்லாஹ்வின் நெருப்பாகும்.

Hümezeh 104:7

அது மனிதனின் உடலிலிருந்து இதயம் வரை ஊடுருவிச் செல்லக்கூடியதாகும்.

Hümezeh 104:8

நிச்சயமாக அது அதில் வேதனை செய்யப்படுபவர்களின் மீது மூடப்பட்டிருக்கும்.

Hümezeh 104:9

அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு அவைகள் நீளமான கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும்.

Fil 105:1

தூதரே!- அப்ரஹாவும் அவனது தோழர்களான யானைப் படையினரும் கஅபாவை இடிக்க நாடியபோது உமது இறைவன் அவர்களை என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?

Fil 105:2

அதனை இடிப்பதற்கான அவர்களின் தீய சூழ்ச்சியை அல்லாஹ் தோல்வியடையச்செய்தான். அதனால் கஅபாவை விட்டும் மக்களைத் திருப்பிவிட வேண்டும் என்ற அவர்களின் ஆசை நிறைவேறவில்லை. அதில் எதனையும் அவர்களால் தொடக்கூட முடியவில்லை.

Fil 105:3

அல்லாஹ் அவர்களுக்கு எதிராக பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.

Fil 105:4

அது களிமண் கற்களை அவர்கள்மீது எறிந்தன.

Fil 105:5

அல்லாஹ் அவர்களை விலங்குகள் தின்று மிதித்துவிட்ட வைக்கோலைப் போன்று ஆக்கிவிட்டான்.

Kureyş 106:1

குறைஷிகளின் பழக்கத்திற்காகவும் அவர்களின் விருப்பத்திற்காகவும்.

Kureyş 106:2

அவர்கள் அச்சமின்றி யமனை நோக்கிச் செல்லும் குளிர்காலப் பயணத்தையும் ஷாம் தேசத்தை நோக்கிச் செல்லும் கோடைகாலப் பயணத்தையும்.

Kureyş 106:3

ஆகவே அவர்கள் இந்த இல்லத்தின் இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கட்டும். அவன்தான் அவர்களுக்கு இந்தப் பயணத்தை இலகுபடுத்திக் கொடுத்தான். அவனுக்கு இணையாக அவர்கள் யாரையும் ஆக்க வேண்டாம்.

Kureyş 106:4

அவன்தான் பசியிலிருந்தும் அரபுக்கள் உள்ளங்களில் ஹரமைக் குறித்தும் அங்கு வசிப்பவர்களைக் குறித்தும் கண்ணியத்தை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயத்திலிருந்தும் விடுதலையளித்தான்.

Mâûn 107:1

மறுமை நாளில் கூலி கொடுக்கப்படுவதை மறுப்பவனை நீர் அறிவீரா?

Mâûn 107:2

அவன்தான் அநாதைகளின் தேவைகளை நிறைவேற்றாமல் கடுமையான முறையில் அவர்களைத் தள்ளிவிடுபவன்.

Mâûn 107:3

அவன் தன்னையோ, மற்றவர்களையோ ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டுவதுமில்லை.

Mâûn 107:4

தம் தொழுகையைவிட்டு அலட்சியமாக இருப்போருக்கு அழிவும் தண்டனையும் உண்டு. அதன் நேரம் முடியும் வரை அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்.

Mâûn 107:5

தம் தொழுகையைவிட்டு அலட்சியமாக இருப்போருக்கு அழிவும் தண்டனையும் உண்டு. அவர்கள் அதன் நேரம் முடியும் வரை அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்.

Mâûn 107:6

அவர்கள் தங்களின் தொழுகையையும் செயல்பாடுகளையும் மக்களுக்குக் காட்டுவதற்காகவே செய்கிறார்கள். அல்லாஹ்வுக்காக மட்டும் அமல்களை செய்வதில்லை.

Mâûn 107:7

உதவுவதால் தங்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவற்றினாலும் கூட மற்றவர்களுக்கு உதவுவதை தடுக்கிறார்கள்.

Kevser 108:1

தூதரே!- நிச்சயமாக நாம் உமக்கு ஏராளமான நன்மைகளை வழங்கியுள்ளோம். அவற்றுள் சுவனத்தில் கிடைக்கும் கவ்ஸர் என்னும் நதியும் ஒன்று.

Kevser 108:2

இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துவீராக. இணைவைப்பாளர்கள் பலியிடுவதன் மூலம் தமது சிலைகளை நெருங்குவதற்கு மாறாக அவனுக்கு மட்டுமே தொழுது, அறுத்துப் பலியிடுவீராக.

Kevser 108:3

நிச்சயமாக உம்மை வெறுப்பவன்தான் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான். அவன் மறக்கப்பட்டுவிட்டான். அவன் நினைவுகூறப்பட்டாலும் தீய முறையிலேயே நினைவுகூறப்படுகிறான்.

Kâfirun 109:1

தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வை நிராகரிப்பவர்களே!

Kâfirun 109:2

நீங்கள் வணங்கும் சிலைகளை நான் தற்போதும் எதிர்காலத்திலும் ஒரு போதும் வணங்கமாட்டேன்.

Kâfirun 109:3

நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.

Kâfirun 109:4

நீங்கள் வணங்கும் சிலைகளை நான் வணங்கக்கூடியவன் அல்ல.

Kâfirun 109:5

நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.

Kâfirun 109:6

உங்களுக்கு நீங்கள் உங்களுக்காக உருவாக்கிக் கொண்ட மார்க்கம். எனக்கு அல்லாஹ் என்மீது இறக்கிய மார்க்கம்.

Nasr 110:1

தூதரே!- உம் மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவியும் அதன் கண்ணியமும் வந்து, மக்கா வெற்றி நிகழும் போது.

Nasr 110:2

இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது.

Nasr 110:3

அது நீர் அனுப்பப்பட்ட பணி முடிவடைவதற்கான அடையாளம் என்பதை அறிந்துகொள்ளும். உம் இறைவன் அளித்த உதவிக்கும் வெற்றிக்கும் நன்றிசெலுத்தும் பொருட்டு அவனைப் புகழ்ந்து போற்றுவீராக. அவனிடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் தன்னிடம் மன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை ஏற்று அவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.

Tebbet 111:1

நபியவர்களின் சாச்சாவான அபூலஹபின் நஷ்டமான செயலினால் அவனது இரண்டு கைகளும் அழிந்துவிட்டது. ஏனெனில் அவன் தூதருக்குத் தொல்லையளித்துக் கொண்டிருந்தான். அவனது முயற்சி வீணாகிவிட்டது.

Tebbet 111:2

அவனது செல்வமும் பிள்ளைகளும் அவனுக்கு என்ன பயனை கொடுத்தது? அவனை விட்டும் வேதனையைத் தடுக்கவுமில்லை. இறையருளையும் அவனுக்குப் பெற்றத்தரவில்லை.

Tebbet 111:3

அவன் மறுமை நாளில் எரியக்கூடிய நரகத்தில் பிரவேசிப்பான். அதன் வெப்பத்தை அனுபவிப்பான்.

Tebbet 111:4

தூதரின் பாதையில் முட்களைப் போட்டு தொல்லையளித்துக் கொண்டிருந்த அவனது மனைவியான உம்மு ஜமீல் அதில் நுழைவாள்.

Tebbet 111:5

அவளது கழுத்தில் உறுதியாக திரிக்கப்பட்ட கயிறு கட்டப்பட்டிருக்கும். அவள் அதன் மூலம் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவாள்.

İhlas 112:1

தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை.

İhlas 112:2

அவனே தலைவனாவான். அவனிடமே பரிபூரண மற்றும் அழகிய பண்புகளில் தலைமைத்துவம் முடிவடைகிறது. அவனிடமே படைப்பினங்கள் தமது தேவைகளை நிறைவேற்றுமாறு எதிர்பார்க்கின்றன.

İhlas 112:3

அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. எனவே அவனுக்கு மகனும் இல்லை; தந்தையும் இல்லை.

İhlas 112:4

அவனது படைப்பினங்களில் அவனுக்கு நிகரானது எதுவும் இல்லை.

Felak 113:1

தூதரே!- நீர் கூறுவீராக: “நான் அதிகாலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

Felak 113:2

தீங்கு விளைவிக்கும் படைப்புகளின் தீங்குகளிலிருந்தும்.

Felak 113:3

இரவில் வெளிப்படும் உயிரினங்கள், கொள்ளையர்கள் ஆகியோரின் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.

Felak 113:4

முடிச்சுகளில் மந்திரித்து ஓதும் சூனியக்கார பெண்களின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.

Felak 113:5

பொறாமைக்காரன் பொறாமையினால் உந்தப்பட்டு செய்யும் செயல்களின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.

Nas 114:1

தூதரே!- நீர் கூறுவீராக: நான் மனிதர்களின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

Nas 114:2

அவர்களின் விஷயத்தில் தான் விரும்பியவாறு செயல்படும் அவர்களின் அரசனிடம், அவனைத் தவிர வேறு அரசன் அவர்களுக்கு இல்லை.

Nas 114:3

அவர்களின் உண்மையான வணக்கத்திற்குரியவனிடம், அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் யாரும் இல்லை.

Nas 114:4

இறைநினைவை விட்டும் கவனமற்றிருக்கும் மனிதனில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் இறை ஞாபகம் ஏற்படும் போது ஒதுங்கிக்கொள்ளும் ஷைத்தானின் தீங்கிலிருந்து (பாதுகாவல் தேடுகிறேன்).

Nas 114:5

அவன் மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.

Nas 114:6

அவன் ஜின்களில் இருப்பதைப் போல மனிதர்களிலும் இருக்கிறான்.